ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்புவது தவறு - கங்குலி

மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதில் அவரது தவறு எதுவும் கிடையாது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

Update: 2024-04-07 00:43 GMT

கோப்புப்படம் 

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரோகித் சர்மாவின் ரசிகர்கள், ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனருமான சவுரவ் கங்குலி மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாது. அது சரியானது கிடையாது. மும்பை அணி நிர்வாகம் தான் அவரை கேப்டனாக நியமித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும், மாநில அணியின் கேப்டனாக இருந்தாலும், தொழில் முறை அணியின் கேப்டனாக இருந்தாலும் சரி விளையாட்டில் இது போல் நடக்க தான் செய்யும்.

ரோகித் சர்மா தனி ரகமான வீரர், மும்பை அணிக்காகவும், இந்திய அணிக்காகவும், கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அவரது செயல்பாடு தனிரகமாகவே இருக்கும். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதில் அவரது தவறு எதுவும் கிடையாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற அவர் தயாரா? என்று கேட்கிறீர்கள். இது குறித்து இன்னும் ஒரு வாரம் போன பிறகு தான் என்னால் பதில் சொல்ல முடியும். நான் சொன்னால் மட்டும் போதாது. தேர்வாளர்கள் அவரை தேர்வு செய்ய விரும்புவது தான் மிகவும் முக்கியமானதாகும். ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்