ரன் ரேட் குறித்து சரியான தகவலை எங்களுக்கு தெரிவிக்கவில்லை - ஆப்கான். பயிற்சியாளர்

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

Update: 2023-09-06 08:19 GMT

Image Courtesy: AFP 

லாகூர்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இலங்கை அணியும், இலங்கை அணியை விட அதிக ரன்கள் அல்லது ஓவர்கள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியும் களம் இறங்கின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 37.1 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் 37.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 292 ரன் எடுக்க வில்லை என்றாலும் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருந்திருக்கிறது.

அதாவது ஆப்கானிஸ்தான்அணி 37.1 ஓவர்களில் 292 ரன் எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

ஆனால் தங்களுக்கு 37.1 ஓவர்களில் 292 ரன் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும், நாங்கள் 295 அல்லது 297 ரன்களை எடுத்தால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் டிராட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆட்ட அதிகாரிகள் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகளை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மற்ற படி 295 அல்லது 297 ரன்கள் எடுத்தால் கூட எங்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற தகவலை எங்களுக்கு தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்