பும்ரா அல்ல...நான் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் - பாபர் அசாம்

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

Update: 2024-07-23 03:45 GMT

Image Courtesy: @TheRealPCB

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபர் அசாம், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் உடன் யூ டியூப் பக்கத்தில் ஒரு உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது டி வில்லியர்ஸ், பாபர் அசாமிடம் உங்களுக்கு எதிராக விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன் யார்?, நீங்கள் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் யார்? என சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு பாபர் அசாம் அளித்த பதில்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பாபர் அசாம், டி வில்லியர்ஸ் இடையே நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு, உங்களுக்கு எதிராக விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன் யார்? என டி வில்லியர்ஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாபர் அசாம், தான் எதிர்த்து விளையாடிய தலைசிறந்த பேட்ஸ்மேன் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் என்றார்.

உடனே டி வில்லியர்ஸ், என்னை தவிர்த்து மற்றொரு பேட்ஸ்மேனை தேர்வு செய்தால், யாரை தேர்வு செய்வீர்கள் எனக் கேட்டதற்கு மற்றொரு பேட்ஸ்மேனும் டி வில்லியர்ஸ்தான் என பாபர் அசாம் பதில் அளித்தார்.

இதையடுத்து நீங்கள் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு, நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கேட் கம்மின்ஸ் என பாபர் அசாம் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்