ரோகித் இல்லை... சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - பாக். முன்னாள் கேப்டன்
சுழலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை தவிர்க்க பி.சி.சி.ஐ. பிட்ச்களை தரமானதாக மாற்றியமைக்க வேண்டுமென சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
கராச்சி,
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமானார்கள்.
அத்துடன் இந்திய வீரர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சிறிய மைதானங்களில் பிளாட்டான பிட்ச்சில் விளையாடப் பழகி விட்டதாக இலங்கை வீரர் தீக்ஷனா கூறினார். அதனால் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து இந்தியாவை தாங்கள் தோற்கடித்ததாகவும் தீக்ஷனா வெற்றிக்குப்பின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வருங்காலங்களில் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை தவிர்க்க பி.சி.சி.ஐ. பிட்ச்களை தரமானதாக மாற்றியமைக்க வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். அத்துடன் ரோகித் சர்மா போன்ற மற்ற வீரர்களை காட்டிலும் சூர்யகுமார் யாதவ் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேனாக திகழ்வதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"முதலில் இந்தியா தங்களது பிட்ச்களில் இருக்கும் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஏனெனில் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் அவர்களது பேட்ஸ்மேன்கள் பிரச்சினையை கொண்டுள்ளனர். அது போன்ற சூழ்நிலைகளில் டாஸ் முக்கியமாகிறது. குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது எளிதாகவும் சேசிங் செய்வது கடினமாகவும் இருக்கிறது. முதல் இன்னிங்சில் வீரர்கள் ஓடுவதால் தேயும் பிட்ச் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இன்னும் கடினமாகிறது.
தற்சமயத்தில் இந்திய மிடில் ஆர்டரில் சூர்யகுமார்தான் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். குறிப்பாக அவர் ஸ்வீப், இன்சைட் அவுட் போன்ற ஷாட்டுகளை சிறப்பாக விளையாடி ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்வார். அவரை இலங்கைத் தொடரில் தேர்வு செய்யாதது தவறான முடிவாக அமைந்தது. அவரைப் போன்ற பேட்ஸ்மேன்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுக்கு 5 அல்லது 6வது இடத்தில் தேவை" என்று கூறினார்.