ரோகித், கோலி, கில் இல்லை ...இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்கதான் - சாஹல் கணிப்பு

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது.

Update: 2024-03-03 10:03 GMT

image courtesy; AFP

பெங்களூரு,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் 2024 ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அல்லது இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக யுஸ்வேந்திர சாஹல் கணித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "இம்முறை ஆரஞ்சு தொப்பியை ஜெய்ஸ்வால் அல்லது ஜோஸ் பட்லர் வெல்வதற்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை நான் வெல்லப் போவதில்லை" என்று கலகலப்பாக தெரிவித்தார்.

ஆனால் இம்முறை நல்ல பார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற சுப்மன் கில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றொரு நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் ஆகியோரை தாண்டி சாஹல் கணித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்