ஸ்டார்க், பவுல்ட்டுக்கு இடமில்லை... உலகின் சிறந்த டாப் 4 பவுலர்கள் இவர்கள்தான் - ஜாகீர் கான் தேர்வு
நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார்.
மும்பை,
நூற்றாண்டு சிறப்புமிக்க கிரிக்கெட் பல மகத்தான வீரர்களை கண்டுள்ளது. தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ஆங்கிலத்தில் வல்லுனர்களும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.
இந்நிலையில் சிறந்த பேட்ஸ்மேன்களைப்போல நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் முதலாவதாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவை அவர் சிறந்த பவுலர் என்று தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் முகமது ஷமியும் சிறந்த பவுலர் என்ற ஜாகீர் கான் பாராட்டியுள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அது போக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோரையும் சிறந்த பவுலர் என்று ஜாகீர் கான் வர்ணித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்த 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்களுக்கு இந்தியா தகுதி பெற்றது. இந்திய அணி அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் நன்றாக செயல்பட்டுள்ளது. எனவே அதற்கு காரணமாக திகழும் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரை என்னுடைய பேப் பட்டியலில் கண்டிப்பாக தேர்ந்தெடுப்பேன்.
அவர்களை தவிர்த்து ரபாடா மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் இருப்பார்கள். பேட் கம்மின்ஸ் இந்த பட்டியலில் இணையக்கூடிய ஒரு சிறப்பான வீரர். எனவே இவர்கள்தான் இப்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டாப் 4 அல்லது 5 பவுலர்கள் ஆவார்கள்" என்று கூறினார்.