களத்தில் மோதிக்கொண்ட நிதிஷ் ராணா, ஷோகீனுக்கு அபராதம்
களத்தில் மோதிக்கொண்ட நிதிஷ் ராணா, ஷோகீனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தயாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் போது கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவின் (5 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதும் அவரை நோக்கி பந்து வீசிய மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஹிருத்திக் ஷோகீன் ஏதோ சொல்ல, கோபமடைந்த ராணா பதிலுக்கு திட்டினார். சில வினாடிகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு மும்பை பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர்களை சமாதானப்படுத்தினார்.
ஆட்டம் முடிந்ததும் இது குறித்து போட்டி நடுவர் விசாரணை நடத்தினார். இதில் இருவரும் ஐ.பி.எல். நடத்தை விதியை மீறியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும், ஷோகீனுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அத்துடன் இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் என்ற முறையில் சூர்யகுமார் யாதவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.