ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்; உலக சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Update: 2023-11-19 10:40 GMT

image courtesy; twitter/ @BCCI

அகமதாபாத்,

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அசத்திய கேப்டன் ரோகித் சர்மா வேகமாக ரன்களை சேர்த்தார். 

குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 47 (31 பந்துகள்) ரன்களை விளாசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த 3 சிக்சர்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 சிக்சர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

அந்த பட்டியல்:

1. ரோகித் சர்மா : 86* (ஆஸ்திரேலியா)

2. கிறிஸ் கெயில் : 85 (இங்கிலாந்து)

3. ஷாஹித் அப்ரிடி : 63 (இலங்கை)

4. சனாத் ஜெயசூர்யா : 53 (பாகிஸ்தான்)

5. ஷாஹித் அப்ரிடி : 51 (இந்தியா)

Tags:    

மேலும் செய்திகள்