'மன்கட் ரன்-அவுட் சரியானது; பந்துமீது எச்சில் தேய்க்க நிரந்தர தடை;' புதிய விதிமுறைகளை கொண்டுவரும் ஐசிசி

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் 1-ந்தேதி அமலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Update: 2022-09-20 23:44 GMT

கோப்புப்படம் 

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியான சில மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சவுரவ் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி, தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய விதிமுறை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள் வருமாறு:-

*பந்தை பளபளப்பு செய்து 'ஸ்விங்' செய்வதற்கு வசதியாக பந்து வீச்சாளர்கள் பந்து மீது எச்சிலை உமிழ்ந்து தேய்ப்பது வாடிக்கையாகும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பந்து மீது எச்சிலை தேய்க்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் எச்சிலை பயன்படுத்த பவுலர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து விரிவாக அலசி ஆராய்ந்ததில், இது அப்படி ஒன்றும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வியர்வையால் பந்தை தேய்த்து வீசுவது அதற்கு நிகரானது தான் என்று ஐ.சி.சி. கமிட்டி கூறியது. இதன் அடிப்படையில் பந்தின் மீது எச்சிலை தடவுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.

*பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடிவந்து விட்டால் அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இனி அப்படி முடியாது. புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். இந்த அம்சம், பந்து வீச்சாளர் புதிய பேட்ஸ்மேனின் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவதற்கு உதவிகரமாக இருக்கும். அதே சமயம் அந்த வீரர் ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது.

*பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு சில அடி வெளியேறும் போது, பவுலர் ரன்-அவுட் செய்தால் சர்ச்சை வெடித்து விடும். 'மன்கட்' என்று அழைக்கப்படும் இந்த ரன்-அவுட் விதிமுறைப்படி சரி என்றாலும் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு அழகல்ல என்பதே பெரும்பாலானோரின் விவாதமாக இருக்கும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதில் முக்கிய திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு ரன்-அவுட் செய்வது முன்பு 'நேர்மையற்ற ஆட்டம்' என்ற பிரிவில் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் இத்தகைய முறையில் ரன்-அவுட் செய்யும் போது அதிகாரபூர்வமாக ரன்-அவுட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இனி இதனை யாரும் கிரிக்கெட் தார்மீகத்துக்கு முரண்பாடான செயல் என்று விமர்சிக்க முடியாது.

*ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிதாக இறங்கும் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் தயாராகி விட வேண்டும். முன்பு இது 3 நிமிடங்களாக இருந்தது. அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் 1½ நிமிடத்திற்குள் தயாராக இருக்க வேண்டும். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

*பவுலர் பந்து வீச ஓடிவரும் போது, பீல்டர்கள் வேண்டுமென்றே பேட்ஸ்மேனின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் நகர்ந்தால் அந்த பந்து, 'டெட் பால்' என்று அறிவிக்கப்படுவதோடு, பந்து வீச்சு அணியை தண்டிக்கும் விதமாக பேட்டிங் அணிக்கு 5 ரன் போனசாக வழங்கப்படும்.

*கிரிக்கெட்டில் பந்துவீச ஓர் அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் முன்பு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இவற்றிலும் மாற்றம் வருகிறது. இதன்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதிக்கும் நேரத்தை கணக்கில் கொண்டு ஆட்டத்தின் கடைசி பகுதியில் பீல்டிங் அணி எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டரை உள்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இது எதிரணி பேட்ஸ்மேன் பவுண்டரிகளை எளிதாக அடிக்க அனுகூலமாக அமையக்கூடும்.

கடந்த ஜனவரி மாதம் 20 ஓவர் கிரிக்கெட்டில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது. 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று முடிந்ததும் அடுத்த ஆண்டில் இருந்து ஒரு நாள் போட்டியிலும் இந்த முறை அமல்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு நாள் போட்டியில் இன்னிங்சில் ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 48 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தால், எஞ்சிய இரு ஓவர்களில் வெளிவட்டத்திற்குள் 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பேரை மட்டுமே நிறுத்த முடியும்.

மேற்கண்ட தகவல் ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்