சுழற்பந்து வீச்சில் கலக்கிய லக்னோ...பெங்களூரு 126 ரன்கள் சேர்ப்பு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.
லக்னோ,
ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆடி வருகின்றன.
பெங்களூரு அணி கடந்த முறை லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளிஸ்சிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக விளங்கியதால் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க முடியாமல் திணறினர். விராட் கோலி , டு பிளிஸ்சிஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.
இதில் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அனுஜ் ராவத் 9 ரன், மேக்ஸ்வெல் 4 ரன், சுயாஷ் பிரபுதேசாய் 6 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.
ஆர்சிபி அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடித்து அசத்தினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டு பிளிஸ்சிஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய மஹிபால் லோப்ரோர் 3 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 126 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி ஆட உள்ளது.