எதிர்வரும் அந்த தொடருக்காக காத்திருக்கிறோம் - இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2024-07-15 01:21 GMT

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் தனதாக்கி இருக்கிறது.

இந்த தொடரில் நேற்று 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 18.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடர் வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "உண்மையிலேயே இந்த தொடர் எங்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. 'முதல் ஆட்டத்தில் தோற்றதும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை அதிகமானது. அதன் வெளிப்பாடு தான் இது. இங்குள்ள சூழல் எங்களுக்கு பழக்கப்படாத ஒன்று. அதற்கு ஏற்ப சீக்கிரமாக மாறிக்கொண்டது சிறப்பானது. அது தான் மீண்டெழுவதற்கு உதவியது. அடுத்ததாக நமது அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஏற்கனவே நான் அங்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாடிகொள்ளதால் நிச்சயம் அந்த அனுபவம் உதவும் என்று நினைக்கிறேன். எதிர்வரும் அந்த தொடருக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்