லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; மோர்ன் வான் விக் அதிரடி சதம்...ஐதராபாத்தை வீழ்த்திய குஜராத்

குஜராத் தரப்பில் மோர்ன் வான் விக் 115 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார்.

Update: 2024-09-23 02:35 GMT

Image Courtesy: @llct20

ஜோத்பூர்,

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான டோயம் ஐதராபாத் அணி, ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் சுரேஷ் ரெய்னா 44 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் லியாம் பிளங்கெட், மனன் சர்மா, பிரசன்னா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் புகுந்தது.

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மோர்ன் வான் விக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மோர்ன் வான் விக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஷிகர் தவான் 21 ரன்னிலும், லெண்டில் சிம்மன்ஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து யாஷ்பால் சிங் களம் இறங்கினார்.

மறுமுனையில் ஐதராபாத்தின் பந்துவீச்சில் சிக்சர் மழை பொழிந்த மோர்ன் வான் விக் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் தரப்பில் மோர்ன் வான் விக் 115 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். ஐதராபாத் தரப்பில் இசுரு உதானா, குர்கீரத் சிங் மான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சவுத்தெர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் கிரேட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்