இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை கோலி மற்றும் ரோகித் நிரூபித்த பின்பே டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்- சஞ்சய் மஞ்ரேக்கர்
உலகக்கோப்பை அருகில் வரும்போது பார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யுங்கள்.
புதுடெல்லி,
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "நாம் நிறைய உலகக்கோப்பைகளில் விளையாடியும் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் நாம் சற்று சுமாரான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். சில அம்சங்கள் உங்கள் கை மீறி சென்றால் அதை எளிதாக்க முயற்சியுங்கள். உலகக்கோப்பை அருகில் வரும்போது பார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யுங்கள். இது போன்ற நிலைமையில் விராட் கோலி தற்போதுள்ள இளம் வீரர்களை விட தாம் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை காட்ட வேண்டும். அதே போல ஹர்திக் பாண்ட்யாவை விட ரோகித் சர்மா சிறந்தவர் என்பதை காட்ட வேண்டும்" என்று கூறினார்.