வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து 483 ரன்கள் குவிப்பு - இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு
கடைசி டெஸ்டில் வில்லியம்சன் சதத்தால் 483 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
வெலிங்டன்,
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஹென்றி நிகோல்ஸ் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து டேரில் மிட்செல், வில்லியம்சனுடன் இணைந்தார். வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை கடைபிடிக்க, மறுமுனையில் டேரில் மிட்செல் வேகமாக மட்டையை சுழற்றினார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முன்னிலை பெற்றது. டேரில் மிட்செல் 54 ரன்னில் (54 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் 226 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் அடித்த 26-வது சதம் இதுவாகும். அணியை தூக்கி நிறுத்திய வில்லியம்சன் 132 ரன்னில் (282 பந்து, 12 பவுண்டரி) ஹாரி புரூக் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ்சிடம் சிக்கினார்.
அடுத்து வந்த பிரேஸ்வெல் 8 ரன்னிலும், கேப்டன் டிம் சவுதி 2 ரன்னிலும், மேட் ஹென்றி ரன் எதுவும் எடுக்காமலும் நடையை கட்டினர். பிளன்டெல் (90 ரன்கள், 166 பந்து, 9 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் 5 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட், ஹாரி புரூக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி 24 ரன்னில் டிம் சவுதியின் பந்து வீச்சில் போல்டு ஆனார். பென் டக்கெட் 23 ரன்னுடனும், ஆலி ராபின்சன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேலும் 210 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது. எனவே இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-வது நாளில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியன்சன் 29 ரன்னை தொட்ட போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். 92-வது டெஸ்டில் ஆடும் வில்லியம்சன் இதுவரை 7,787 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர்களில் ராஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் (112 டெஸ்ட்) முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் முதலிடத்தை தனதாக்கினார்.