விராட் மட்டும் போதும்... மற்ற அனைவரையும் கழற்றி விடுங்கள் - பெங்களூரு அணிக்கு ஆர்பி சிங் அட்வைஸ்

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது.

Update: 2024-09-29 13:25 GMT

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், ஏலத்தில் எவ்வளவு செலவிடலாம் என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன், ஐ.பி.எல். நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் விரிவாக விவாதித்தது. அப்போது அணி நிர்வாகிகள் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். அது குறித்து பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில் 18-வது ஐ.பி.எல். போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆர்.டி.எம். என்ற சிறப்பு சலுகை மூலம் மேலும் ஒரு வீரரை தக்கவைக்க முடியும். அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மாற்று அணி ஏலத்தில் அதிகபட்சமாக எடுக்கும்பட்சத்தில் அந்த வீரரை அதே தொகைக்கு ஆர்.டி.எம். -ஐ பயன்படுத்தி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளலாம். கடந்த ஏலத்துக்கு முன்னதாக ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களுக்கான குறைந்தபட்ச தொகையே ரூ.11 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் ரீடெய்ன் செய்வதற்கு பதிலாக ஆர்டிஎம் வாய்ப்புடன் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 2 வீரர்களுக்கு ரூ.18 கோடி ஊதியமும், 2 வீரர்களுக்கு ரூ.14 கோடி ஊதியமும் வழங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் ரீடென்ஷன் பாலிசி எப்படி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர்பி சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "பெங்களூரு அணியை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் கிடையாது என்று கருதுகிறேன். ஏனென்றால் விராட் கோலியை தவிர்த்து அனைத்து வீரர்களையும் ஆர்சிபி நிர்வாகம் ரிலீஸ் செய்யும் என்று நினைக்கிறேன். ரீடெய்ன் செய்வதற்கு பதிலாக அவர்கள் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்துவார்கள்.

ஏனென்றால் ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கே வாங்க முடியும். குறைவாக வாங்கினால் அது அணி நிர்வாகத்திற்கு சாதகமாக அமையும். ஒருவேளை ரூ.11 கோடிக்கு அருகில் சென்றுவிட்டால், தாராளமான ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தலாம். முகமது சிராஜ் அற்புதமான பவுலர்தான். அவரின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் மெகா ஏலத்தில் ரூ.14 கோடி வரை செல்ல வாய்ப்புகள் குறைவு. அதற்காகதான் கூடுதல் ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன்.

பெங்களூரு அணியை பொறுத்தவரை புதிய மனநிலையுடன் செல்ல வேண்டும். அவர்களுக்கு விராட் கோலி கட்டாயம் தேவை. ஏனென்றால் முதல் சீசனில் இருந்தே அணிக்காக பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். அதனால் விராட் கோலியை சுற்றி நிர்வாகம், தங்களது அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் ரூ.18 கோடி ஊதியம் அளிக்கும் அளவிற்கு தகுதியான ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்