நடப்பு ஐபிஎல் சீசனில் 4-வது சதம் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஜாஸ் பட்லர்
பெங்களூரு அணிக்கு எதிராக 60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை
ஆமதாபாத்,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ஏற்கனவே 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வைத்துள்ள பட்லர் இந்த போட்டியிலும் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். 60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் பட்லர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கோலி 4 சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.