இப்படி செய்வது டெல்லி வீரர்களுக்கே உரிய இயல்பு - ஹர்ஷித் ராணா

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக ஹர்ஷித் ராணா விளையாடினார்.

Update: 2024-05-30 04:41 GMT

image courtesy: PTI

புதுடெல்லி,

ஐ.பி.எல். 2024 தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னையில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திக் கோப்பையை வென்றது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றியில் டெல்லியை சேர்ந்த இளம் வீரரான ஹர்ஷித் ராணா முக்கிய பங்காற்றினார். 12 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

முன்னதாக இந்த தொடரில் கொல்கத்தா அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ஐதராபாத்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் ஐதராபாத் தொடக்க வீரரான மயங்க் அகர்வாலை கொல்கத்தாவின் ஹர்ஷித் ராணா அவுட்டாக்கினார். அதை கையில் முத்தமிட்டு மயங்க் அகர்வாலை நோக்கி பறக்க விட்டு ஹர்ஷித் ராணா வெறித்தனமாக கொண்டாடினார். அது பல ரசிகர்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஏனெனில் மயங் அகர்வால் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரராக திகழ்கிறார். மறுபுறம் இளம் வீரரான ஹர்ஷித் ராணா பற்றி பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கே தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முழுமையாக வளர்வதற்குள் சீனியருக்கு மதிப்பு கொடுக்காமல் இப்படி நடந்து கொள்ளலாமா என்று ரசிகர்கள் அவரை விமர்சித்தனர். அதே போல இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் அவரை கண்டித்திருந்தார். அத்துடன் ஐ.பி.எல். நிர்வாகமும் அவருக்கு அபராதத்தை தண்டனையாக கொடுத்திருந்தது.

அந்த நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரேலை அவுட்டாக்கிய ஹர்ஷித் ராணா அப்படி கொண்டாடவில்லை என்றாலும் மைதானத்தை விட்டு வெளியே போ என்ற வகையில் கையை நீட்டி வெறித்தனமாக கொண்டாடினார். அதனால் கடுப்பான ஐ.பி.எல். நிர்வாகம் அவருக்கு 100 சதவீதம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதித்தது.

இந்நிலையில் இப்படி வெறித்தனமாக கொண்டாடுவது டெல்லி வீரர்களுக்கே உரிய இயல்பு என ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்த முறை அவ்வாறு நான் செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும் இதுவே என்னுடைய கிரிக்கெட் . என்னுடைய கிரிக்கெட்டை எப்போதும் நான் இப்படியே விளையாடியுள்ளேன். களத்திற்கு வெளியே நான் மிகவும் ஜாலியாக இருப்பேன். ஆனால் களத்தில் நான் நண்பர்களை சேர்ப்பதற்காக விளையாடுவதில்லை. வெற்றிக்காக விளையாடுகிறேன். அபிஷேக் என்னுடைய முதல் ஓவரில் 16 ரன்கள் அடித்தார்.

உங்களுக்கு எதிராக ஒருவர் சிக்சர் அடிக்கும்போது உங்களால் சிரிக்க முடியாது. அடுத்த ஓவரிலேயே அவருடைய விக்கெட்டை எடுத்ததால் அப்படி கொண்டாடினேன். அதற்காக நான் தடை செய்யப்பட்டேன். இருப்பினும் நாங்கள் டெல்லியில் இருந்து வருபவர்கள். நாங்கள் கிரிக்கெட்டை இதயத்திலிருந்து விளையாடுகிறோம். அந்த ஆக்ரோஷம் தான் விராட் கோலியை உருவாக்கியது. இஷாந்த் சர்மாவை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்தது. ரிஷப் பண்ட் கபாவில் அற்புதத்தை நிகழ்த்தினார். கவுதம் கம்பீர் 2 உலகக்கோப்பைகளை இந்தியாவுக்காக வென்று கொடுத்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்