ஐ.பி.எல்.; பெங்களூரு வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட கோலி, அனுஷ்கா: வைரலான வீடியோ

போட்டியில் வெற்றி பெற்றது தெரிந்ததும், விராட் கோலி களத்திற்குள் ஓடி சென்று சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Update: 2024-05-19 03:49 GMT

பெங்களூரு,

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது. பிளே-ஆப் சுற்றில் இடம் பெறும் 4 அணிக்கான தரவரிசையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 3 அணிகள் முன்பே தகுதி பெற்று இடம் பிடித்து விட்டன.

இதனால், மீதமுள்ள 4-வது இடம் யாருக்கு என நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூரு அணியும் விளையாடின.

218 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், 201 ரன்களையாவது எடுத்து விட்டால், சிறந்த ரன் விகித அடிப்படையில், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆனால், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களே அந்த அணியால் எடுக்க முடிந்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 4-வது மற்றும் பிளே-ஆப் சுற்றுக்கான இறுதி இடம் அந்த அணிக்கு கிடைத்தது.

இதனால், போட்டியில் தோல்வியை தழுவியதுடன், தொடரில் இருந்தும் சென்னை அணி வெளியேறி உள்ளது. சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும். மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் முன்பே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த போட்டி முடிந்ததும், பெங்களூரு அணி வீரர்கள், நிர்வாகத்தினர், ரசிகர்கள் என பலரும் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணியின் வீரரான விராட் கோலி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

போட்டியில் வெற்றி பெற்றது தெரிந்ததும், களத்திற்குள் ஓடி சென்று சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் பார்வையாளர்கள் வரிசையில் நின்றபடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்