ஐ.பி.எல். கிரிக்கெட்: 25-வது முறையாக 200 ரன்களை கடந்த சென்னை அணி..!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

Update: 2023-04-17 22:41 GMT

பெங்களூரு,


10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேவும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ருதுராஜ் (3 ரன்) ஏமாற்றம் அளித்தார். முகமது சிராஜ் வீசிய பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.

அடுத்து கான்வேவுடன், அஜிங்யா ரஹானே இணைந்தார். இருவரும் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். ஸ்கோர் 90-ஐ எட்டிய போது (9.3 ஓவர்) ரஹானே 37 ரன்களில் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஹசரங்காவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார்.

துபே மிரட்டல்

3-வது விக்கெட்டுக்கு நுழைந்த ஷிவம் துபேவும் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டார். மேக்ஸ்வெல் ஓவரில் அவர் தூக்கியடித்த ஒரு பந்து ஸ்டேடியத்தின் மேற்கூரையில் விழுந்தது. அவரது இன்னொரு இமாலய சிக்சர் 111 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. மறுபுறம் கான்வேவும் ரன்மழை பொழிய ரன்ரேட் 10-க்கு மேலாக எகிறியது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கான்வே 83 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஹர்ஷல் பட்டேலின் யார்க்கரில் போல்டு ஆனார். ஷிவம் துபே தனது பங்குக்கு 52 ரன்கள் (27 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஸ்கோர் 200-ஐ தாண்டுவதற்கு வித்திட்டார். தொடர்ந்து அம்பத்தி ராயுடு 14 ரன்னும், ஜடேஜா 10 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

227 ரன் இலக்கு

20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகவும் பதிவானது. மொயீன் அலி 19 ரன்களுடனும், கேப்டன் டோனி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 227 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. விராட் கோலி 6 ரன்னில் போல்டு ஆனார். அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் டக்-அவுட்டில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பாப் டு பிளிஸ்சிசும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. நல்ல கேட்ச் வாய்ப்பை டோனி பிடிக்க தவறினார்.

3-வது விக்கெட்டுக்கு பிளிஸ்சிஸ்சும், மேக்ஸ்வெல்லும் கூட்டணி போட்டு சென்னை பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே, தீக்ஷனா ஓவர்களில் சகட்டுமேனிக்கு சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். 8.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. 14 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே தோன்றியது.

மேக்ஸ்வெல் 76 ரன்

இந்த பரபரப்பான கட்டத்தில் மேக்ஸ்வெல் 76 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்) தீக்ஷனாவின் சுழற்பந்தை விரட்ட முயற்சித்த போது பந்து மேலே எழும்பியது. அதை டோனி சூப்பராக கேட்ச் செய்தார். அடுத்த ஓவரில் பிளிஸ்சிஸ்சும் (62 ரன், 33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) இதே போல் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. திரில்லிங்கான இறுதிஓவரை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வீசினார். கட்டுக்கோப்பாக வீசிய பதிரானா, மாற்று ஆட்டக்காரர் பிரபுதேசாயின் (19 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதுடன் 10 ரன் மட்டுமே வழங்கி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சென்னை வெற்றி

பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. துஷர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், பதிரானா 2 விக்கெட்டும் சாய்த்தனர். 5-வது லீக்கில் ஆடிய சென்னைக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு 3-வது தோல்வியாகும்.

25-வது முறையாக 200 ரன்களை கடந்த சென்னை அணி

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 226 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 200 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 25-வது நிகழ்வாகும். அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.

மொத்தம் 33 சிக்சர்

இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் 17 சிக்சர், பெங்களூரு சார்பில் 16 சிக்சர் என்று மொத்தம் 33 சிக்சர் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முந்தைய அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை சமன் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்