ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு-லக்னோ அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.

Update: 2023-04-10 00:55 GMT

பெங்களூரு,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டூபிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை பந்தாடியது. உள்ளூரில் நடந்த இந்த ஆட்டத்தில் கேப்டன் பிளிஸ்சிஸ் (73 ரன்), விராட் கோலி (82 ரன்) இருவரும் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் சுழலில் சிக்கி 81 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. மறுபடியும் சொந்த ஊரில் ஆடும் பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் சொதப்பிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 2 வெற்றி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்தை 121 ரன்னில் சுருட்டியதுடன், அதில் குருணல் பாண்ட்யா ஆல்-ரவுண்டராக ஜொலித்து வெற்றியை எளிதாக்கினார்.

ஆனால் குறைவான பவுண்டரி தூரம் கொண்ட பெங்களூருவில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் என்று நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள லக்னோ அணியில் இன்றைய ஆட்டத்தில் குயின்டான் டி காக்கும் களம் காணும் போது பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும். எனவே ரன்வேட்டைக்கு பஞ்சமிருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்