ஐபிஎல் 2024: இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் அஸ்வின் கணிப்பு!

ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.

Update: 2023-11-23 10:31 GMT

சென்னை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி நடைபெற உள்ள ஏலத்தில் இந்த உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அறிமுக உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்த நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க பவுலர் என்ற மாபெரும் சாதனையை படைத்த ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- " ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரராகவும், சுழற்பந்து வீசக்கூடிய திறமையும் கொண்ட ஆல் ரவுண்டர். எந்த அணிகளுக்கு டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடுவதுடன் சில ஓவர்களை வீசும் ஸ்பின்னர் தேவைப்படுகிறதோ அந்த அணிகள் ரச்சின் ரவீந்திராவை வாங்குவதற்கு போட்டியிடலாம். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அவர் பெரிய அளவில் அசத்தவில்லை என்றாலும் நல்ல வருங்காலத்தைக் கொண்டுள்ளார்.

என்னுடைய 2வது வீரர் ஜெரால்ட் கோட்ஸி. தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான அவர் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போகலாம். ஏனெனில் அவர் தொடர்ந்து 145 – 150 கி.மீ. வேகத்தில் பவுன்சர்களை வீசும் திறமையை கொண்டுள்ளார். எனவே ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய 2 வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய முக்கிய வீரர்களாக இருப்பார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்