இந்தியா ஒன்னும் பாகிஸ்தான் கிடையாது....இங்கிலாந்தை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலைகள் போன்று இந்தியாவில் இருக்காது என பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

Update: 2024-01-21 06:02 GMT

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.

அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணிக்கெதிராக அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவிலும் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருப்பதாக ஆண்டர்சன் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணில் தார் ரோடுபோல இருந்த பிட்சுகள் இந்தியாவில் இருக்காது என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். அதனால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று எச்சரிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"புதிதாக தங்களை உட்படுத்திக் கொண்டுள்ள அதிரடி அணுகு முறையில் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அதற்கு தகுந்த பேக்-அப் திட்டத்தையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகள் இங்கே இருக்காது. அதேபோல் இந்தியா ஒன்னும் பாகிஸ்தான் கிடையாது. பாகிஸ்தானில் மைதானங்கள் சற்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.

ஆனால் இங்கே இருக்கும் சூழ்நிலைகள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்தியாவில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி இங்கிலாந்து தற்போது மனதளவில் பலமடைந்துள்ளது. ஆனால் அவர்களுடைய பேஸ்பால் ஸ்டைலை இந்தியாவில் செயல்படுத்துவது கடினம். ஏனெனில் இந்திய ஸ்பின்னர்களை அவர்கள் எதிர்கொள்வது சுலபமாக இருக்காது. மேலும் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் சமாளிப்பது எளிதாக இருக்காது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்