டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார்: சாம் கரன், ஹேல்ஸ் முன்னேற்றம்
உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(859 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்தின் டெவோன் கான்வே 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 22 இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். இந்த பட்டியலில் கோலி 11-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 17-வது இடத்திலும், ரோகித் சர்மா 18-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன் இந்த பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் முகமது நபியும், 3-வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர்.
ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 16, 2022 நிலவரப்படி)
சூர்யகுமார் யாதவ் - 859 புள்ளிகள்
முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள்
பாபர் ஆசம் - 778 புள்ளிகள்
டெவோன் கான்வே - 771 புள்ளிகள்
ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள்
டேவிட் மாலன் - 719 புள்ளிகள்
ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள்
க்ளென் பிலிப்ஸ் - 684 புள்ளிகள்
ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள்
பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்