அடுத்த ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மாவை வேறொரு அணியில் பார்க்க விரும்புகிறேன் - வாசிம் அக்ரம்

கண்டிப்பாக அடுத்த வருடம் மும்பை அணியில் ரோகித் விளையாட மாட்டார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-08 21:48 GMT

கராச்சி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன், ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

அந்த சூழ்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா வெறும் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்கினார். அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றியை மறந்த மும்பை நிர்வாகம் மீண்டும் மீண்டும் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே இந்த வருடத்துடன் மும்பையிலிருந்து வெளியேறி அவர் வேறு ஐ.பி.எல். அணியில் விளையாட வேண்டும் என்பதே பல ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் கண்டிப்பாக அடுத்த வருடம் மும்பை அணியில் ரோகித் விளையாட மாட்டார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் கொல்கத்தா அணியில் ரோகித் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அடுத்த ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்க மாட்டார் என்று எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது. அவரை நான் கொல்கத்தா அணியில் பார்க்க விரும்புகிறேன். கம்பீர் ஆலோசகராகவும் ஸ்ரேயாஸ் கேப்டனாகவும் உள்ள அந்த அணியில் ரோகித் ஓப்பனிங்கில் விளையாடுவதாக நினைத்துப் பாருங்கள். அவர்களிடம் ஏற்கனவே ஈடன் கார்டனஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு தகுந்த வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. அந்த பிட்ச்சில் சிறந்த வீரரான ரோகித் நன்றாக பேட்டிங் செய்வார். எனவே அவர் கொல்கத்தா அணியில் விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்