ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பறித்ததற்கு மன்னிக்கவும் - விராட் கோலி ஜாலி பேட்டி..!!

வங்காளதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.;

Update:2023-10-19 23:22 IST

Image Courtacy: ICCTwitter

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.

முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

இந்தப்போட்டியில் சதம் அடித்ததற்காக விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 8 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்திருக்கிறார். இது விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதம் ஆகும்.

போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த விராட் கோலி, "ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பறித்ததற்கு என்னை மன்னிக்கவும். நான் ஒரு பெரிய பங்களிப்பை செய்ய விரும்பினேன். நான் உலகக் கோப்பையில் அரைசதங்கள் மட்டும் அடித்துக் கொண்டிருக்கிறேன். அதை இந்த முறை முடித்து வைக்க விரும்பினேன். ஆட்டத்தை துவங்கும் பொழுது ப்ரீ ஹிட் கிடைப்பது சிறப்பான ஒன்று.

நான் இதுகுறித்து சுப்மன் கில்லிடம் இதை தான் அடிக்கடி சொல்வேன். இது போன்ற சூழல் குறித்து நாம் கனவு கண்டிருப்போம். அதை நினைத்துக் கொண்டு தூங்கவும் செய்வோம். எப்படி ஆட்டத்தை தொடங்க வேண்டும் என நினைத்தோமோ அதேபோல் இன்று நான் விளையாடினேன். இதன் மூலம் நானே என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

ஆடுகளமும் நன்றாக இருந்ததால் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. பீல்டர்களுக்கு இடையே பந்தை அடித்து பவுண்டரிகளை எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆட்டத்தின் யுக்தி. டிரெஸ்சிங் ரூமும் நல்ல முறையில் இருக்கிறது. அணியின் உத்வேகமும் சிறந்த முறையில் இருக்கிறது. அணியில் இருக்கும் உத்வேகத்தால் தான் இது போன்ற ஆட்டத்தை எங்களால் விளையாட முடிகிறது. இவ்வளவு பெரிய மக்கள் முன்பு விளையாடியதை சிறப்பான உணர்வாக நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்