பஹல்காம் தாக்குதல்: இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் - ரவிச்சந்திரன் அஸ்வின்
விருதுகளுக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஆண்டு தோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
அதே போல கிரிக்கெட் வீரர் அஸ்வின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. விருதை வாங்க டெல்லி சென்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ரொம்ப பெருமைக்குரிய தருணம். விருதுகளுக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கவில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடியதற்கு கிடைத்த ஒரு ஊதியமாக இதை நினைக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விருது வாங்கும் அனைவருக்கும் இது பெருமைக்குரிய தருணமாகும்.
தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின் கூறியதாவது, தாக்குதல் குறித்து கருத்து சொல்லும் நிலையில் நான் இல்லை. நான் ராணுவத்திலும் வேலை செய்யவில்லை. ராணுவத்தில் வேலை செய்யும் அனைவரும் மிகப்பெரிய மனிதர்கள். ராணுவத்தினர் படும் கஷ்டம் நமக்கு தெரியாது. தாக்குதல் என்பது சாதாரண விஷயம் கிடையாது.
என்னை பொறுத்தவரைக்கும் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்று இனிமேல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.