மோசமான வார்த்தைகளால் கவுதம் கம்பீர் என்னை திட்டினார் அதனால்தான் களத்தில் மோதல் ஏற்பட்டது- ஸ்ரீசாந்த்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆரம்பத்திலேயே குஜராத் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார்.

Update: 2023-12-07 09:24 GMT

image courtesy; twitter/ @llct20

சூரத்,

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

சூரத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் அடித்தது. 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு கிறிஸ் கெயில் 84 ரன்கள், கெவின் ஓப்ராயன் 51 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் ஜேக் காலிஸ் 11, ரிச்சர்ட் லெவி 17, பார்திவ் படேல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆரம்பத்திலேயே குஜராத் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார். அதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்ட நிலையில் நடுவர்களும் சக வீரர்களும் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் அந்த சமயத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் கவுதம் கம்பீர் தம்மை திட்டியதாக அந்த ஆட்டம் முடிந்தவுடன் தனது வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீசாந்த் பேசியது பின்வருமாறு. "எந்த காரணமும் இல்லாமல் சக வீரர்கள் மற்றும் அனைவரிடமும் சண்டை போடக்கூடிய கவுதம் கம்பீருடன் என்ன நடந்தது என்பதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த தூண்டுதலும் இல்லாமல் என்னிடம் வம்பிழுத்து கொண்டே இருந்த அவர் என்னை மேட்ச் பிக்ஸிங் செய்பவர் என்றும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி திட்டினார்.

அந்த சமயத்தில் என் மீது தவறு எதுவுமில்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேற்கொண்டு நான் எந்த விவரத்தையும் சொல்ல விரும்பவில்லை. அவருடைய வார்த்தைகளால் நானும் என்னுடைய குடும்பமும் மனதளவில் உடைந்துள்ளோம். நான் அவரை திட்டாத போதும் அவர் என்னை தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் பேசினார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்