2011 உலக கோப்பை அணியில் தோனி தான் ரோகித்தை வேண்டாம் என்றார் - முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்த உண்மையை முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

Update: 2023-08-23 05:31 GMT

Image Courtesy: PTI

மும்பை,

1983 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பின்னர் 28 வருடங்கள் கழித்து 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.

சீனியர் வீரர்களையும், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தோனி 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

இருப்பினும் அந்த அணியில் தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் முதல் 4 வருடங்களில் 57 இன்னிங்சில் வெறும் 1248 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்திருந்தார். அதனால் அவர் தேர்வு செய்யப்படாமல் கோலி, ரெய்னா ஆகியோர் மிடில் ஆர்டரில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிறிஸ்டன் அந்த அணியில் 15வது வீரராக ரோகித் சர்மாவை தேர்வு செய்யலாம் என்று ஆதரவு கொடுத்தும் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்று கருதிய கேப்டன் தோனி மறுப்பு தெரிவித்து பியூஸ் சாவ்லாவை தேர்வு செய்ததாக 2011 உலக கோப்பையை தேர்வு செய்த தேர்வு குழுவில் இடம் பிடித்திருந்த உறுப்பினர் ராஜா வெங்கட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

2011 உலகக் கோப்பை அணி தேர்வுக்கான திட்டத்தில் ரோகித் சர்மாவும் இருந்தார். அந்த சமயத்தில் நானும், யாஷ்பால் சர்மாவும் தென் ஆப்பிரிக்காவில் இருந்தோம். இந்தியா அப்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

மேலும் ஸ்ரீகாந்த், சுரேந்தர பாவே, நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் சென்னையில் இருந்தனர். எனவே நாங்கள் தேர்வு செய்த அணியை தேர்வுக்குழுவினர் ஏற்றுக்கொண்டார்கள். அப்போது 15வது வீரராக ரோகித் சர்மாவின் பெயரை நாங்கள் பரிந்துரைத்தோம். அதற்கு கேரி கிறிஸ்டனும் சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் கேப்டன் தோனி பியுஷ் சாவ்லா அணியில் வேண்டும் என்றார். அது சரியான முடிவாக இருக்கும் என இறுதியில் கேரி கிறிஸ்டனும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. அது பற்றி ரோகித் சர்மாவிடம் தெரிவிப்பதற்கு அவரை சந்திக்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அதனால் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்தாலும் கேப்டன் ப்யூஸ் சாவ்லாவை விரும்புவதால் நாங்களும் ஏற்று கொண்டோம். குறிப்பாக 14 வீரர்களை தேர்வு செய்த நாங்கள் கடைசி வீரரின் தேர்வை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களிடம் வழங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்