டி20 உலகக் கோப்பை: இலங்கையின் அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு சிரமம்?- முழு விவரம்

நமிபியாவின் வெற்றியால் 'சூப்பர் 12'-ல் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் வலுவான அணிகள் ஒன்று சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-16 12:38 GMT

Image Courtesy: AFP/ Twitter @ICC

கீலாங்,

8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இலங்கை அணியை வீழ்த்தி நமிபியா அணி திரில் வெற்றி பெற்றது. நமிபியா அணியின் இந்த வெற்றியால் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் வலுவான அணிகள் ஒன்று சேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூப்பர்12 சுற்றில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்1), இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (குரூப்2) அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மேலும் 4 அணிகள் நுழைவதற்கான தகுதி சுற்று போட்டிகள் தான் இன்று தொடங்கியுள்ளன.

தற்போது தகுதி சுற்று போட்டியில் குரூப் 'ஏ' வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. தகுதி சுற்று குரூப் 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும். குரூப் 'பி' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இந்திய அணியின் குரூப்பில் இடம்பெறும்.

உலக கோப்பை தொடர் தொடங்குவதறகு முன் ஏ பிரிவில் இலங்கை முதலிடமும், நமிபியா 2-வது இடமும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நமிபியா அணி வெற்றி பெற்றுள்ளதால் மீதம் உள்ள 2 போட்டிகளிலும் இலங்கை அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் நமிபியா அணி முதலிடம் பிடிக்கும்.

இதனால் இலங்கை அணி 2-வது இடம்பிடித்து, சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியின் குரூப்பில் இடம்பெற வாய்ப்புள்ளது. நமிபியாவுடன் தோல்வியை தழுவியதால் இலங்கையை குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த ஆசிய கோப்பையில் கூட இலங்கை அணி முதல ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானிடம் தோற்ற பிறகு, எஞ்சிய அனைத்து போட்டியிலும் வென்று ஆசிய கோப்பையை வென்றது. இதனால், பலமான இலங்கை அணி, இந்தியாவுடன் இடம்பெறும் வகையில் குரூப் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தது தகுதி சுற்றில் பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி, பலம் வாய்ந்த அணிகளான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோதும். ஒருவேளை இறுதியில் இவ்வாறு குரூப் அமைந்தால் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அடுத்த சுற்று வாய்ப்பு சிரமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்