துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணி 'சாம்பியன்'
ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தெற்கு மண்டலம் 213 ரன்னும், மேற்கு மண்டலம் 146 ரன்னும் எடுத்தன. 67 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்து 298 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டலம் 84.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பிரியங் பன்சால் 95 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
இரு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை சாய்த்த தெற்கு மண்டல வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் கவீரப்பா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.