இந்த தோல்வியை நினைத்து கவலை வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில்... - தினேஷ் கார்த்திக்

இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நிறைவடைந்த ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.

Update: 2024-08-12 04:57 GMT

புதுடெல்லி,

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமானார்கள்.

இந்நிலையில் இலங்கையிடம் சந்தித்த இந்த தோல்வியை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஐ.சி.சி. தொடர்களில் தங்களுடைய முழு பலத்துடன் களமிறங்கி எதிரணிகளை தோற்கடிக்கும் திறமை இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பீஸ்ட் (மிருகம்) போல கம்பேக் கொடுக்கும் என்று கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நாம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே அடுத்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கு முன்பாக நமது அணியில் நிறைய மாற்றங்கள் வரும். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அந்த தொடரில் இலங்கையில் விளையாடிய தற்போதைய அணியை விட கொஞ்சம் வித்தியாசமான இந்திய அணி விளையாடும் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தையும் விட சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களில் இந்தியா எப்போதுமே தங்களுடைய முழு பலத்துடன் சேர்ந்து வந்து பீஸ்ட் (மிருகம்) போல விளையாடும். அப்போது மற்ற அணிகள் வாவ் இந்திய அணி எவ்வளவு திறமை வாய்ந்தது என்பது எங்களுக்கு தெரியும் என்று சொல்வார்கள்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்