கேப்டனுடைய உடல் தகுதி மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்...ஆனால் ? ரோகித் சர்மா குறித்து கபில்தேவ் கடும் விமர்சனம்

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Update: 2023-01-08 10:45 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி ,

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி மொத்தமாக 68 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 5 டெஸ்ட், 21 ஒருநாள் போட்டி மற்றும் 42 டி20 போட்டிகள் அடங்கும். இந்த 68 போட்டிகளில் ரோஹித் சர்மா மொத்தமே 39 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். இதில் 2 டெஸ்ட் ,8 ஒரு நாள் போட்டி மற்றும் 29 டி20 போட்டிகள் அடங்கும்.

பணிச்சுமை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு அவருக்கு பல போட்டிகளில் ஒய்வு கொடுக்கப்பட்டது. இது ஒரு காரணமாக இருந்தாலும், ரோஹித் சர்மா முக்கிய தொடர்களுக்கு முன்பு காயம் காரணமாக வெளியேறியது மற்ற ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ரோஹித் சர்மா உடற்தகுதி குறித்த விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது.

ரோகித் சர்மா குறித்து கபிலதேவ் கூறுகையில் ,

'ரோகித் சர்மா கிரிக்கெட் திறன் குறித்து சொல்ல முடியாது. அனைத்தும் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருடைய உடல் தகுதியை குறித்து எப்போது பேசினாலும் பெரிய கேள்விக்குறி இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான உடல் தகுதி அவரிடம் இருக்கிறதா? .ஒரு கேப்டனுடைய உடல் தகுதி மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

கேப்டனை போல் நாமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என சக அணி வீரர்கள் நினைக்க வேண்டும். சக வீரர்கள் தங்களுடைய கேப்டனை பெருமையாக கருத வேண்டும். ஆனால் ரோகித் சர்மா விஷயத்தில் அப்படி இல்லை.

ரோகித் சர்மா கேப்டனானப் பிறகு அதிகமாக ரன்கள் அடிக்கவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. . அவர் இந்திய அணியின் வெற்றிகரமான வீரராக திகழ்ந்து வருகிறார். ரோகித் சர்மா மட்டும் தன்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த அணியும் அவரை பின்பற்றும்' என கபில் தேவ் கூறியுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்