இதை செய்தால் கோப்பையை வெல்லலாம் - தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Update: 2024-06-29 09:18 GMT

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின. அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இறுதிப்போட்டியை மற்றொரு சாதாரண போட்டியாகவே பார்ப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் அப்படி நினைக்காமல் எதையும் அதிகமாகவும் முயற்சிக்காமல் இறுதிப்போட்டியில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் இந்தியாவை மண்ணை கவ்வ வைக்கலாம் என்று தென்னாப்பிரிக்காவுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2007 உலகக் கோப்பையையும் கேப்டனாக வென்ற அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "நிறைய அணிகள் இது சாதாரணமான மற்றொரு போட்டி என்று கூறுகின்றனர். அப்படி சொல்வதால் இது எவ்வளவு பெரிய அழுத்தமான போட்டி என்பதை மறைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை செய்வது நல்லதல்ல. எனவே பைனலில் என்ன அழுத்தம் இருக்குமோ அதை ஏற்றுக்கொள்வது நல்லது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் இதற்கு முன் பைனலில் விளையாடியதில்லை. எனவே பைனலுக்கு முன்பாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீங்கள் எப்போதும்போல் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தென் ஆப்பிரிக்கா இதுவரை தோல்வியை சந்திக்காமல் பைனலுக்கு வந்துள்ளது. எனவே அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. எதையும் கடினமாக முயற்சிக்க வேண்டியதில்லை. மாறாக பைனல் நாளில் அவர்கள் சிறந்த அணியாக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்