இந்தியாவுக்கு எதிரான தோல்வி - பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேட்டி
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூயார்க்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இவர்கள் அனைவரும் சர்வதேச வீரர்கள். இவர்கள் சிறப்பாக செயல்படாத பொழுது அழுத்தம் வெளியில் இருந்து வரும் என்று நன்றாகத் தெரியும். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
இவர்களில் பலரும் வெளியில் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய ஆட்டத்தை எப்படி முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
சேசிங்கின் போது ஒன்று, இரண்டு வீதம் எடுக்கவும், தவறான பந்து வந்தால் அதை பவுண்டரி அடிக்கவும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எல்லாமே மிகச் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் பதினைந்தாவது ஓவரில் இருந்து எல்லாம் மாறியது.
அங்கிருந்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதன் காரணமாக பவுண்டரிகள் தேவைப்பட்டது. இது கடினமான ஒன்று. நாங்கள் முதல் 15 ஓவர்களில் என்ன செய்தோமோ அதையே செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.