சி.எஸ்.கே. அணியில் இடம்பெற முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் - தினேஷ் கார்த்திக் விளக்கம்

நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார்.

Update: 2024-04-08 10:23 GMT

image courtesy: PTI 

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் கடந்த 2004-ல் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். ஆனால் சர்வதேச அரங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதே காலகட்டத்தில் அறிமுகமான தோனி மிகச்சிறப்பாக விளையாடி கேப்டனாக முன்னேறினார்.

அதன் காரணமாக கடைசி வரை இந்திய அணியில் நிலையான வாய்ப்பு பெறாத தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் 2008 முதல் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.

நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார். இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அவருக்கு கனவாகவே போயுள்ளது.

இந்நிலையில் 2008 ஐ.பி.எல். ஏலத்தில் வி.பி. சந்திரசேகர் தோனியை எடுத்தபோதே தமக்கு எப்போதும் சி.எஸ்.கே. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு:-

"நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி. சந்திரசேகர்தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார். எனவே சி.எஸ்.கே .அணியின் ஒரு அங்கமாக இருந்த அவர் என்னை ஐ.பி.எல். தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன்.

இருப்பினும் கடைசியில் அவர் தோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாங்கள் இருவரும் இந்திய அணியில் அங்கமாக இருந்தோம். அதில் நான் சற்று தடுமாற்றமாக இருந்தேன். எனவே தோனியுடன் என்னையும் ஒரே அணியில் சி.எஸ்.கே. தேர்வு செய்யாது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் அப்போதுதான் சி.எஸ்.கே. அணியின் ஒரு பகுதியாக நான் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு புரிந்தது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்