கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுதேன் - ஸ்ரேயாஸ் ஐயர்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-04-08 13:41 IST

Image Courtesy: @BCCI

முல்லன்பூர்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடி வருகிறது. பஞ்சாப் அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து சிறப்பாக செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 3 போட்டிகளில் 159 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரிடம் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று பஞ்சாப் அணி நிர்வாகத்தின் சமூக வலைதள ஊடகத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, கடைசியாக நான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் நாள் பயிற்சி செய்யும் போது அழுதேன். அன்றைய நாளில் நிறைய அழுதேன்.

ஏனெனில், வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்த போது எனக்கு எதுவுமே சரியாக செல்லவில்லை. அதனால் என் மீதே கோபமடைந்த நான் அழுதேன். சொல்லப்போனால் நான் எளிதாக அழக்கூடியவன் கிடையாது. அதையும் தாண்டி அழுதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அசத்திய வேகத்தில் சாம்பியன்ஸ் டிராபியிலும் அசத்துவேன் என்று நினைத்தேன்.

ஆனால், துபாயில் பிட்ச் வித்தியாசமாக இருந்ததால் முதல் நாளிலேயே அதற்கு என்னை நான் உட்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. அதனால் பயிற்சி முடிந்த பின் நான் எக்ஸ்ட்ராவாக மீண்டும் பயிற்சி செய்ய விரும்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காததால் மிகவும் கோபமடைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்