உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்காளதேச அணிகள் இன்று மோதல்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், சூழலுக்கு தக்கபடி முடிவு எடுக்கும்படி போட்டி நடுவரை ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.

Update: 2023-11-06 00:12 GMT

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் டெல்லியில் மோத உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் மோதும் இலங்கை, வங்காளதேசம் அணிகள் ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டன. இதன் முடிவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் டாப்-8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முயற்சிக்கும்.

டெல்லியில் காற்று மாசு மோசமாக இருப்பதால் இவ்விரு அணி வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. நிலைமையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழலுக்கு தக்கபடி முடிவு எடுக்கும்படி போட்டி நடுவரை ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு அதிகமாகி வீரர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானால், நிலைமை சரியாகும் வரை ஆட்டத்தை நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு இந்த ஆட்டத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்