ஜெகதீசன் -சாய் கிஷோர் ஜோடி அதிரடி : கோவை அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

கோவை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி வெற்றி பெற்றது.

Update: 2022-07-12 17:47 GMT

Image Tweeted By @TNPremierLeague

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 17 ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஷ்வின் வெங்கட்ராமனும், சுரேஷ் குமாரும் களமிறங்கினர். அஷ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 32 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கவுசிக் காந்தி - ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் காந்தி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராதா கிருஷ்ணன் (8) சசிதேவ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் சாய் கிஷோர் - ஜெகதீசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் அரைசதம் கடந்து அசத்தினார். 51 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஜெகதீசன் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 18.5 வது ஓவரில் 171 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கோவை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்