'இந்திய அணிக்கு பும்ராவின் அனுபவம் மிகவும் முக்கியம்' - ரோகித் சர்மா

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ராவை அதிகமான போட்டிகளில் விளையாட வைக்க முயற்சிப்போம் என ரோகித் சர்மா தெரிவித்தார்.

Update: 2023-07-27 22:06 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயமடைந்தார். முதுகில் அழுத்தத்தினால் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதற்கு கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டு வருகிறார். அவர் ஏறக்குறைய முழுமையாக குணமடைந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு சென்று மூன்று சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் (ஆக.18, 20 மற்றும் 23-ந் தேதி) விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு 29 வயதான பும்ரா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அவர் அசத்தினால் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது.

பும்ரா குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகிக் சர்மாவிடம் நிருபர்கள் கேட்ட போது, 'அணிக்கு பும்ராவின் அனுபவம் மிகவும் முக்கியம். பெரிய காயத்தில் இருந்து அவர் மீண்டு வருகிறார். அவர் அயர்லாந்து போட்டிக்கு செல்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவரை அதிகமான போட்டிகளில் விளையாட வைக்க நாங்கள் முயற்சிப்போம்.

ஏனெனில் இது போன்ற தீவிரமான காயத்தில் இருந்து திரும்பும் போது போட்டிக்குரிய உடல்தகுதி அவசியம். என்னை பொறுத்தவரை அவர் நிறைய போட்டிகளில் விளையாடும் போது அது அவருக்கும், அணிக்கும் நல்லதாகும். ஒரு மாதத்தில் அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதை பார்ப்போம். அவர் விஷயத்தில் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டுள்ளார் என்பதை பொறுத்தே எங்களது திட்டமிடல் இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்