அவர்கள் இருவரும் எங்களது திட்டத்தை சீர்குலைத்தனர் - குஜராத்துக்கு எதிரான தோல்விக்கு பின் பிளெமிங்
சுப்மன் கில், சாய் சுதர்சனின் அதிரடி பேட்டிங் எங்களது திட்டத்தை சீர்குலைத்தது என்று ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் அடித்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன் மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தோல்விக்கு பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், 'சுப்மன் கில், சாய் சுதர்சனின் தாக்குதல் ஆட்டம் மிகவும் உயர்தரமானதாக இருந்தது. அவர்கள் இருவரும் முதல் ஓவரில் இருந்தே எங்களது திட்டத்தை சீர்குலைத்தனர். அவர்களது சிறப்பான பேட்டிங்கால் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் அருமையாக ஆடி 96 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஒரு அற்புதமான வீரர். அதனை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
சில வீரர்கள் இல்லாதது எங்களுக்கு சற்று பாதகமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்கள் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருந்ததால் நல்ல நம்பிக்கை இருந்தது. சில சமயங்களில் நீங்கள் எல்லா விஷயங்களையும் சரியாக செய்தாலும், நல்ல பேட்டிங் உங்களை அழுத்தத்தில் தள்ளலாம். அவர்களது அதிரடி ஆட்டம் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து சறுக்கலை ஏற்படுத்தியது. எங்களது பீல்டிங் நன்றாகவே இருக்கிறது. ஒரு ஆட்டத்தை வைத்து எதையும் சொல்ல முடியாது. இந்த ஆட்டத்தில் நெருக்கடி காரணமாக பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் பின்னடைவை சந்தித்தோம்' என்று கூறினார்.