வங்காளதேச பிரீமியர் லீக்; கோமிலா விக்டோரியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பார்ச்சூன் பாரிஷால்

வங்காளதேச பிரீமியர் லீக் தொடரின் தொடர் நாயகனாக தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2024-03-01 22:12 GMT

Image Courtesy: @BCBtigers

டாக்கா,

7 அணிகள் கலந்து கொண்ட வங்காளதேச பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவு பெற்றன. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ், பார்ச்சூன் பாரிஷால், ரங்பூர் ரைடர்ஸ், கோமிலா விக்டோரியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் கோமிலா விக்டோரியன்ஸ் - பார்ச்சூன் பாரிஷால் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கோமிலா விக்டோரியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் மஹிதுல் இஸ்லாம் அன்கான் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். பார்ச்சூன் பாரிஷால் தரப்பில் ஜேம்ஸ் புல்லர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பார்ச்சூன் பாரிஷால் அணி தரப்பில் கைல் மேயர்ஸ் 46 ரன்கள் அடித்தார். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த தொடரின் தொடர் நாயகனாக தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்