உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி..!!

உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்துள்ளது.

Update: 2023-10-12 18:04 GMT

Image Courtacy: AFP

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 109 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து 312 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர கேசவ் மகராஜ், சம்சி மற்றும் ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வெற்றியை பறிகொடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.

தற்போதைய ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்