கோலி, சூர்யகுமார் அதிரடி: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இந்தியா தகுதி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை வீழ்த்தி 2-வது வெற்றியோடு சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது.;
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் நேற்றிரவு துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கத்துக்குட்டி அணியான ஹாங்காங்குடன் மோதியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த ஹாங்காங் கேப்டன் நிஜாகத்கான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தொடக்க ஜோடி 5-வது ஓவரில் பிரிந்தது. ஆயுஷ் சுக்லாவின் பந்து வீச்சில் சிக்சர் அடித்த ரோகித் சர்மா (21 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவரது அடுத்த பந்தையும் சிக்சருக்கு முயற்சித்தார். ஆனால் இந்த முறை மெதுவாக வீசியதால் சரியாக 'கிளிக்' ஆகாத பந்து அய்ஜாஸ் கானிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. 2-வது விக்கெட்டுக்கு வந்த விராட் கோலி துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் இன்னொரு பக்கம் லோகேஷ் ராகுலின் பேட்டிங்கில் வேகமில்லை. மந்தமாகவே ஆடினார். முதல் 10 ஓவர்களில் இந்தியா 70 ரன்களே எடுத்திருந்தது. ஸ்கோர் 94 ஆக (13 ஓவர்) உயர்ந்த போது ராகுல் 36 ரன்களில் (39 பந்து, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
கோலி-சூர்யா கலக்கல்
இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். அதன் பிறகே ஆட்டம் சூடுபிடித்தது. தடாலடியான பேட்டிங்கால் ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. கோலி தனது 31-வது அரைசதத்தை எட்டினார்.
வேகப்பந்து வீச்சாளர் ஹரூன் அர்ஷாத் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிரமாதமான 4 சிக்சர்களை பறக்க விட்டு பரவசப்படுத்தினார். அத்துடன் 22 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும்.
20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 59 ரன்களுடனும் (44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் (45 பந்து) விளாசியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்தியா வெற்றி
பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் முடிந்த வரை போராடி பார்த்தனர். பாபர் ஹயாத் (41 ரன், 35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கின்சித் ஷா (30 ரன்), ஜீஷன் அலி (26 ரன்) ஆகியோரின் பேட்டிங் குறிப்பிடும்படி இருந்தது. 20 ஓவர் முழுமையாக ஆடிய அந்த அணி 5 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. என்றாலும் மெத்தனபோக்கு காரணமாக இந்திய பவுலர்கள் கடைசி 2 ஓவர்களில் 33 ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான், ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். 4 புள்ளிகளுடன் 'ஏ'பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா சூப்பர்4 சுற்றுக்கும் முன்னேறியது. இந்த பிரிவில் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணி ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றை அடையும்.
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன்களில் அதிக வெற்றியை தேடித்தந்தவர்களின் பட்டியலில் டோனி (72 ஆட்டத்தில் 41 வெற்றி) முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை வரிசையில் 2-வது இடத்தில் இருந்த விராட் கோலியை நேற்று ரோகித் சர்மா முந்தினார். கோலி தலைமையில் இந்தியா 50 ஆட்டங்களில் ஆடி 30 வெற்றிகளை பெற்றுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 37 ஆட்டங்களில் 31-ல் வெற்றிகளை குவித்துள்ளது.
பந்து வீசிய கோலி
பேட்டிங்கில் முத்திரை பதித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு திடீரென பந்து வீசுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். ஆட்டத்தின் 17-வது ஓவரை விராட் கோலி வீசினார். ஒரு ஓவர் வீசிய அவர் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்க வில்லை.