வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அஸ்வின்.!

அஸ்வின் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 34-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் சாய்த்தார்.

Update: 2023-07-15 20:22 GMT

டொமினிகா,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான 36 வயது ஆர்.அஸ்வின் அபாரமாக பந்து வீசி கலக்கி முதல் இன்னிங்சில் 60 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 71 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவை வருமாறு:-

* 93-வது டெஸ்டில் ஆடிய ஆர்.அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 8-வது முறையாக 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் டெஸ்டில் அதிக முறை 10 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற கும்பிளேவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக முறை 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இருவரும் இணைந்து 5-வது இடம் வகிக்கின்றனர். இந்த வகையில் இலங்கையின் முரளிதரன் (22 முறை), ஆஸ்திரேலியாவின் வார்னே (10 முறை), நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ (9 முறை), இலங்கையின் ஹெராத் (9 முறை) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

* அஸ்வின் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 34-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் சாய்த்தார். இதன் மூலம் அவர் ஹெராத்துடன் (இலங்கை) இணைந்து ஒட்டுமொத்தத்தில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இந்திய வீரர்களில் கும்பிளேவுக்கு (35 முறை) அடுத்த இடத்தில் இருக்கிறார். மேலும் அஸ்வின் 6-வது முறையாக ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி இருக்கிறார். இந்த வகையில் இலங்கையின் முரளிதரன் (11 தடவை), ஹெராத் (8 தடவை) ஆகியோர் மட்டுமே அஸ்வினை விட முன்னிலை வகிக்கின்றனர்.

* அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன்கள் விட்டுகொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் இந்திய வீரரின் சிறந்த பந்து வீச்சாக பதிவானது.

* 2-வது இன்னிங்சில் கைப்பற்றிய 7 விக்கெட்டையும் சேர்த்து ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்டில் 486 விக்கெட், ஒருநாள் போட்டியில் 151 விக்கெட், 20 ஓவர் போட்டியில் 72 விக்கெட்) அஸ்வினின் விக்கெட் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களில் ஹர்பஜன்சிங்கை (707 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஸ்வின் 2-வது இடத்துக்கு உயர்ந்தார். இந்த வகையில் கும்பிளே (953 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

* வெஸ்ட்இண்டீஸ் அணியின் கடைசி விக்கெட்டான ஜோமில் வாரிகனை, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்திய அணி வெற்றி எல்லையை கடக்க வைப்பது இது 23-வது முறையாகும். அவர் இதன் மூலம் அதிகபட்சமாக 22 முறை ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த சுழற்பந்து வீச்சாளர் வார்னேயின் சாதனையை முந்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்