5-வது டி20; நியூசிலாந்தை சுருட்டி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி, மேட் ஹென்ரி, பெர்குசன் மற்றும் ஈஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 17.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 4 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 26 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இப்திகார் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரின் தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் பின் ஆலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.