ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி - உலக சாதனையை நோக்கி இந்திய அணி

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

Update: 2022-09-24 13:44 GMT

Image Courtesy: AFP 

நாக்பூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து இந்தியாவுக்கு முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளான இந்தியா தற்போது சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

அந்த பட்டியல்: 1. இந்தியா : 20* வெற்றிகள் (2022) 2. பாகிஸ்தான் : 20 வெற்றிகள் (2021) 3. பாகிஸ்தான் : 17 (2018)

இதனால் நாளை ஹைதராபாத் நகரில் நடைபெறும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை முழுமையாக தனதாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

எனவே நாளைய கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்வதுடன் இந்த உலக சாதனையை முழுமையாக இந்தியா தனதாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்