2வது டெஸ்ட்; 2வது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-04 08:07 GMT

Image Courtesy: AFP

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 396 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்தியா அணியில் ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், ரோகித் 13 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய சுப்மன் கில் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் ஸ்ரேயாஸ் 29 ரன், பட்டிதார் 9 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து அக்சர் படேல் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

பார்ம் இன்றி தவித்து வந்த சுப்மன் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் சதம் அடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்