நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; ஹென்றி அபார பந்துவீச்சு - ஆஸ்திரேலியா 256 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-03-09 01:44 GMT

Image Courtesy: AFP

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம், வில் யங் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் யங் 14 ரன்னிலும், லதாம் 38 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் வில்லியம்சன் 17 ரன், ரவீந்திரா 4 ரன், மிட்செல் 4 ரன், பிளெண்டல் 22 ரன், பிலிப்ஸ் 2 ரன், குகெலின் 0 ரன், ஹென்றி 29 ரன், சவுதி 26 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் வெறும் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லபுஸ்சாக்னே 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 94 ரன்கள் பின்னிலையுடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்