2-வது டி20: ரிஸ்வான், பகார் ஜமான் அதிரடி...அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
டப்ளின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டக்கர் 53 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கி தொடக்க ஆட்டக்காரர் ஆன சைம் அயூப் 6 ரன்களிலும், அவரை தொடர்ந்து பாபர் அசாம் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிஸ்வானுடன் பகார் ஜமான் கை கோர்த்தார். இருவரும் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களின் அதிரடியால் பாகிஸ்தான் இலக்கை வேகமாக நெருங்கியது.
வெறும் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பகார் ஜமான் 78 ரன்களும், முகமது ரிஸ்வான் 75 ரன்களும் குவித்தனர்.