இந்த நாள் இனிய நாள்

உயிர்ப்புடன் இருக்கும் இன்றைய தினத்தை நாம் அர்த்தப்பூர்வமாகச் செலவு செய்ய வேண்டும். நாளைக்கென்று எதையேனும் திட்டமிடலாம். அதில் தவறில்லை, ஆனால் நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு, வாழும் நாட்களை வீணடித்து விடக்கூடாது.

Update: 2022-11-01 14:37 GMT

நாளை இன்னும் வரவில்லை. பின் ஏன் அது குறித்து கவலைப்பட வேண்டும். இன்றைய நாள் இன்னும் மறையவில்லை, நாம் உற்சாகமாக ஏன் இருக்கக் கூடாது?

இன்றைய நாளை நல்ல நாளாக மாற்ற, நற்செயல்களில் ஈடுபடுவதுதான் ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளனுக்கு அழகு. நாளைய தினத்தைக் குறித்து கவலைப் படவோ அவசரப்படவோ வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகின்றான்:

``அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. எனவே அதற்கு அவசரப்படாதீர்கள்" (திருக்குர்ஆன் 16:1)

நாளை என்ன நடக்குமோ..? எனது எதிர்காலம் என்னவாகுமோ..? என்று எண்ணி எண்ணி கவலைப்படுவதும் ஒருவகையில் அவசரமே. நாளை உங்களுக்காக என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அது உங்களை கண்டிப்பாக வந்தடையும். யாராலும் அதைத் தடுக்க முடியாது. பின் ஏன் அது குறித்து கவலைப்பட வேண்டும்? என்று இந்த வசனத்தில் இறைவன் தெளிவாகக் கூறுகிறான்.

நாளை என்ன நடக்கும் என்பதை ஆண்டவன் மட்டுமே அறிவான். நாளை நடக்க இருக்கும் ஐந்து விஷயங்களில் ஆண்டவனோடு எவராலும் போட்டியிட முடியாது என்பதே உண்மை. இது குறித்து திருக்குர்ஆன் கூறுகிறது:

``இறுதித் தீர்ப்புக்குரிய அந்த வேளையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். அன்னையின் கருவறைகளில் வளர்ந்துகொண்டிருப்பவை என்ன என்பதையும் அவனே அறிவான். எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 31:34)

அதுபோல, இன்றே செய்யக்கூடிய ஒரு விஷயத்தை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும் தவறே. இந்த மனோபாவம் ஷைத்தானுடையது. ஒரு நல்ல செயலை நாம் செய்ய நினைத்தால், செய்ய வேண்டாம் என்று ஷைத்தான் ஒருபோதும் சொல்லமாட்டான். மாறாக நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தூண்டுவான்.

நேற்று என்பது மறைந்துவிட்டது. இனி ஒருபோதும் அது வரப்போவதில்லை. பிறகு எதற்கு நேற்றைய கவலைகளை நினைத்து இன்றைய நாளை நாம் அழித்துக்கொள்ள வேண்டும்? மாறாக நேற்றைய வாழ்வில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதையே நினைத்து புலம்பிக்கொண்டிருப்பதில் எந்த லாபமும் இல்லை.

அவ்வாறே நாளை என்பது இன்னும் வரவில்லை. நாளை நாம் இருப்போமா? இல்லையா என்றே தெரியாது. பிறகு எதற்காக நாளைய தினத்தைப்பற்றி அஞ்ச வேண்டும்? அதன் துயரங்களை ஏன் நெஞ்சில் சுமக்க வேண்டும்?

ஒருவேளை இன்று நாம் இறந்துவிட்டால் மறுமையில் அல்லாஹ் நம்மிடம், வாழ்ந்த காலத்தில் மரணிக்கும் வரை என்ன செய்தாய் என்றுதான் கேட்பான். அல்லாஹ்விடம் நாம், நாளைய தினத்தைக் குறித்து நினைத்துக்கொண்டு இருந்தேன் என்று பதில் சொல்ல முடியுமா? செய்யாத ஒன்றைப் பற்றி இறைவன் கேள்வி கேட்க மாட்டான். எனவே செய்ய வேண்டியதை சரியான சமயத்தில் செய்ய வேண்டும்.

எனவே இன்றைய நாளை இனிமையான நாளாக அமைத்துக் கொள்வோம். நாளைய தினம் குறித்த அச்சத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிடுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்